வீட்டை காணவில்லை: கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்
கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண்.
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி சுந்தரி (வயது 59). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பவானி அரசு மருத்துவமனையின் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதிலிருந்து கிடைத்த தொகை மட்டும் வங்கிகளில் கடன் பெற்று ரூ.22 லட்சம் மதிப்பில் பவானி அருகே தொட்டிபாளையம் கிராமத்தில் 9 சென்ட் நிலத்தை வாங்கி 2009-ஆம் ஆண்டு புதிதாக வீடு ஒன்றை கட்டி அதில் வசித்துள்ளார்.
இந்நிலையில் 2015-ம் ஆண்டு செல்லமுத்துவுக்கு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவ வசதிக்காக குடும்பத்துடன் 2015-ல் செல்லமுத்து ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் 2019 -ம் ஆண்டு செல்லமுத்து உடல்நலம் சரியில்லாமல் இறந்தார்.
அதன்பின் சுந்தரி பவானி தொட்டிபாளையத்தில் உள்ள தங்களது சொந்த வீட்டில் தங்கலாம் என்று சென்று உள்ளார். ஆனால் அங்கு வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு இடித்து அகற்றப்பட்டதுடன், நிலத்திற்கான எல்லைக் கற்களும் இல்லாததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பின் வருவாய்த்துறையில் ஆவணங்களை சரிபார்த்த போது அந்த இடம் வேறொருவரின் பெயருக்கு முறைகேடாக மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில், தனது வீடு மற்றும் நிலத்தை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறும் சுந்தரி மனு அளித்தார். இதனை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் புகார் குறித்து கள விசாரணை நடத்த ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu