சாலைப் பாதுகாப்பு விதிகளை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க அமைச்சர் வேண்டுகோள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து, துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாலைப் பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது. நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து பேரணி மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 35வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா கடந்த ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து ஆகியவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தில் சாலை விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்திடும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்கும் பொழுது விபத்துகளை தவிர்க்க முடியும். அதேபோல் விபத்துகளை தவிர்ப்பதற்காக துறைவாரியாக பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று, தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்து ஏற்பட்டவர்களை காக்கும் வகையில், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் - 48 என்ற திட்டத்தினை தொடங்கி வைத்து, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் விபத்து ஏற்பட்டவர்களுக்கு 48 மணி நேரத்தில் அரசு மற்றும் அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும். அதேப்போன்று விபத்து ஏற்பட்டவர்களை மீட்பவர்களுக்கும் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் நாம் அனைவரும் சாலைவிதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்து இந்த ஆண்டுக்காக வெளியிடப்பட்ட சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய மஞ்சள் பைகளை, பள்ளி மாணவ மாணவியர்கள், ஓட்டுநர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவினை முன்னிட்டு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தினை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
இந்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் செங்குந்தர் பள்ளி மற்றும் ஏஇடி பள்ளி மாணவ, மாணவியர்கள், நேரு யுவகேந்திரா ஜேசிஸ், ஈரோடு ஹைடெக் இரண்டு சக்கர வாகன தொழில்நுட்ப வல்லுநர்களும், ஊர்க் காவல் படையினர் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வழியாக செங்குந்தர் பள்ளி வரை சென்றனர். விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தும் இப்பேரணியில் சென்றது.
இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பதுவை நாதன் (ஈரோடு மேற்கு), வெங்கட்ரமணி (ஈரோடு கிழக்கு), சக்திவேல் (பெருந்துறை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் ஸ்வர்ணலதா, மேலாளர் (வணிகம்) ராமகிருஷ்ணன், ஈரோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள், உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu