அமைச்சர் நேருவும், இளங்கோவனும் பேசியது மார்பிங்; எ.வ.வேலு குற்றச்சாட்டு
ஈரோடு வீரப்பன்பாளையம் பகுதியில் தேர்தல் பணிமனையை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.
ஈரோட்டில் தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேருவும், இளங்கோவனும் பேசியதை மார்பிங் செய்து பரப்புகின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டினார். ஈரோட்டில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வந்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். மதசார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற ஒட்டுமொத்த தலைமை கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களிடத்தில் நேரடியாக சென்று பார்த்த போது வரவேற்பு உள்ளது. திமுகவுக்கு தான் வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். பெணாகள் வாக்கு திமுகவுக்கு தான். முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளார். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த மாநிலங்களிலும் நடக்காத ஒன்று.
ஈரோடு மாநகர பகுதியில் 400 கோடி அளவுக்கு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் அதற்கு ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருப்பவர் எம்எல்ஏவாக இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும்.
திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். செங்கோட்டையன் எம்.எல்.ஏ ஒரு பேட்டியில் கூறும்போது, இந்த தேர்தல் முடிவு என்பது செங்கோட்டைக்கே தெரியும் என்று கூறி இருக்கிறார். அவர் தவறுதலாக தனது பெயரை கூறுவதற்கு பதில் அப்படி சொல்லி இருக்கலாம்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த ஆட்சி குறித்து நல்ல விதமாக அவர் தான் கூறியுள்ளார். அவர் அந்த கட்சியில் இருப்பதால் தேர்தல் பணியாற்றி வருகிறார். அவருக்கே நன்றாக தெரியும் திமுக ஆட்சிக்கு வந்தால் தான் மாநகராட்சி வளரும் என்றார்.
நேற்று தோழமைக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைப்பது எப்படி குறித்து பேசி இருந்தோம். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் நாளை மறு தினம் செயல்வீரர்கள் கூட்டம் வைத்திருக்கிறோமே அதற்கு வரும் தலைவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அமைச்சர் அளித்த பதிலை தவறாக புரிந்து கொண்ட விஷமிகள் சிலர் அமைச்சர் நேரும், இளங்கோவனும் பணம் குறித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். அதை நான் கூட தான் கேட்டேன். இதை வேண்டுமென்றே திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பி விட்டு உள்ளனர்.
எது செய்தாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாநகர் திமுக செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் எம்பி கந்தசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu