ஈரோடு மாநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அன்னை சத்தியாநகர், பூம்புகார் நகர் மற்றும் சூளை ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
ஈரோடு மாநகரில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளோடு பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஈரோடு மாநகர் பகுதிகளில் நேற்று (நவ.6) திங்கட்கிழமை இரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து மழை இடைவிடாமல் பெய்தது. இதனால், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அன்னை சத்யா நகர், பூம்புகார் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் சூளை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் பரிதவித்தனர்.
இந்நிலையில், மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை (இன்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அன்னை சத்யா நகர், பூம்புகார் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் சூளை ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததின் அடிப்படையில், மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மழைநீரால் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், தற்காலிகமாக, பெரும்பள்ளம் ஓடையை தூர்வாருவதற்கும், ஓடையின் மேல் உள்ள பாலம் மற்றும் குடிநீர் குழாய்களை உயர்த்துவதற்கும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதே போன்று, இப்பகுதியில் ஓடையில் ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் வழங்கி ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 4 நடமாடும் மருத்துவ குழுவும், மக்களைத் தேடி மருத்துவக் குழுவும் மற்றும் மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவின் மூலமாக வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் 3 வேளையும் உணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மழைநீரால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பிளிச்சிங் பவுடர் வழங்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியின் மூலம் கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இனிவரும் காலங்களில் மழைநீரால் பாதிக்கப்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த அதற்கான விரிவான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி 1-வது மண்டலக் குழுத்தலைவர் பழனிச்சாமி, மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu