அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 98% நிறைவு: அமைச்சர் முத்துசாமி
அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச்.13) திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் கிருஷ்னானுண்ணி முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழக முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார்கள். அந்த வகையிலே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய்பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மொத்தமாக 958 கி.மீ நீளம் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து குளங்களுக்கும் நீர் செல்லும் வகையில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று மீதமுள்ள பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான அரசாணை யில் நிலம் பயன்பாட்டு உரிமை சுழுரு (Right of Use) முறையில் தனியார் பட்டா நிலங்களில் குழாய் பதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கென நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு நிலம் மற்றும் பயிர் சேதாரத்திற்கான இழப்பீட்டு தொகையினை வழங்குவதற்கு ஒப்புதல் பெறும் பொருட்டு ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தொழில்துறை, நில நிர்வாக ஆணையரகம், மற்றும் வருவாய்நிர்வாகத்துறை ஆகியோரின் ஒப்புதலுடன் கோப்பு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி அன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்ய தனியார் பட்டா நில உரிமையாளர்களுடன் போதுமான ஆலோசனை கூட்டங்கள் நடத்திய பின், அதன் அறிக்கையை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு சமர்ப்பித்த பிறகு இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவு அரசால் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கும் குழுவின் (Tender Award Committee) ஒப்புதலுக்குப் பின்னர் கூடுதல் முதன்மைச் செயலாளர், நீர்வளத்துறை மற்றும் துணைச் செயலாளர், நிதித்துறை அவர்களுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17, 21-ம் தேதிகளில் ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், ரூ.1954.137 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதலுக்கான முன்மொழிவு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதித்துறையால் கோரப்பட்ட தெளிவுரைகள் முழுமையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நீரேற்று நிலையங்கள் 1 மற்றும் 2-க்கான மாற்று மின் ஆதாரத்திற்காக (Dedicated Secondary Power Source) துணை மின் நிலையம் அமைக்க கங்காபுரம் கிராமத்தில் (நரிப்பள்ளம்) 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்த Khadi Krait-ல் இருந்து முன்நுழைவு கடிதம் எதிர்நோக்கப்படுகிறது. இதற்கான கோப்பு கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறையின் ஆய்வில் உள்ளது. மேலும் இத்திட்டம் 98 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதம் முடிக்கப்படவேண்டிய பணிகள் அனைத்தும் 20 முதல் 25 நாட்களுக்குள் முடிக்கப்படும் என தொடர்புடைய அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் செயற்பொறியாளர் மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு-அவிநாசி திட்டம்), கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu