சென்னிமலையில் ரூ.14.46 கோடியில் புதிய திட்டப் பணிகள்: அடிக்கல் நாட்டிய அமைச்சர்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டிச்சிபாளையம் ஊராட்சி, வள்ளிபுரத்தான்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்த போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
சென்னிமலையில் ரூ.14.46 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டிச்சிபாளையம், புங்கம்பாடி, வடமுகம்வெள்ளோடு மற்றும் குமாரவலசு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 2 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.14.46 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று (நவம்பர் 3) துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டிச்சிபாளையம் ஊராட்சி, வள்ளிபுரத்தான்பாளையத்தில் ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நிழற்குடையினையும், ராசாம்பாளையம் பகுதிநேர நியாயவிலைக்கடையை முழுநேர நியாயவிலை கடையாக மாற்றியும், புதுவலசு பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதி நேர புதிய நியாயவிலைக்கடையினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அதேப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.47 லட்சம் மதிப்பீட்டில் வி.பி.ஏ. நகர் மெயின் சாலையை பலப்படுத்துதல் பணியினையும், ரூ.9.86 லட்சம் மதிப்பீட்டில் கரட்டுப்பாளையம் முதல் அண்ணமார் கோவில் சாலை வரை சாலையை பலப்படுத்துதல் பணியினையும், கவுண்டிச்சிபாளையம் ஊராட்சி, லட்சுமணன் வீடு முதல் சென்னிமலை பிரதான சாலை வரை ரூ.7.71 லட்சம் மதிப்பீட்டில் புதிய வடிகால் அமைக்கும் பணியினையும் அவர் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ரூ.8.11 லட்சம் மதிப்பீட்டில் பொட்டுசாமி விநாயகர் கோவில் வீதியில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் சி.எஸ்.ஐ. காலனியில் புதிய கழிப்பிடம் அமைக்கும் பணியினையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.48 லட்சம் மதிப்பீட்டில் தாசநாயக்கன்பாளையம் பிரகாஷ் மளிகை கடை முதல் ஏற்கனவே உள்ள வடிகால் வரை வடிகால் அமைக்கும் பணியினையும் அவர் துவக்கி வைத்தார்.
கவுண்டிச்சிபாளையம் ஊராட்சி (ராசாம்பாளையம்) ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மெயின்சாலை முதல் தங்கராஜ் வீடு வரையும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் துரைசாமி வீடு முதல் பொன்னுசாமி வீடு வரையும், ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கருப்பனசாமி வீடு முதல் துரைசாமி வீடு வரையும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மாரப்பன் வீடு முதல் சாந்தாமணி வீடு வரையும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கேவிந்தசாமி வீடு முதல் நாச்சிமுத்து வீடு வரையும் தலா 80 மீ நீளத்திற்கு புதிய கான்கிரீட் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளையும், புங்கம்பாடி ஊராட்சி நத்தக்காட்டுப்பாளையத்தில் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் விநாயகர் கோவில் முதல் லோகநாதன் வீடு வரை வடிகால் அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.
இதனையடுத்து, ரூ.4.49 லட்சம் மதிப்பீட்டில் பழனிச்சாமி மளிகை கடை முதல் சக்திவேல் வீடு வரையும், ரூ.5.62 லட்சம் மதிப்பீட்டில் தேவாளிப்பாறை பிரதான சாலை முதல் திருப்பதி வீடு வரையும் புதிய கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கும், வடமுகம் வெள்ளோடு ஊராட்சியில் ரூ.6.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்மதி வீடு முதல் விஜய் நர்சரி பள்ளி வரை சாலை மேம்பாடு செய்யும் பணியினையும், ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் சிந்து வீடு முதல் விஜய் நர்சரி பள்ளி வரை வடிகால் அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, குமாரவலசு ஊராட்சியில் ரூ.12.94 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவன்காட்டுவலசு கருக்கண்ணமார் கோவில் வி.எஸ்.கதிரேசன் வீடு முதல் ஏற்கனவே உள்ள வடிகால் வரை வடிகால் அமைக்கும் பணியினையும், ரூ.4.89 லட்சம் மதிப்பீட்டி வெள்ளோடு அவல்பூந்துறை மெயின்சாலை முதல் குமாரவலசு பள்ளி வரை சாலை மேம்பாடு செய்யும் பணியினையும், ரூ.6.24 லட்சம் மதிப்பீட்டில் ராக்சாம்பாளையம் மெயின் சாலை முதல் தேவராஜ் வீடு வரை வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாடு செய்யும் பணியினையும் துவக்கி வைத்தார்.
மேலும், ரூ.8.06 லட்சம் மதிப்பீட்டில் ராக்சாம்பாளையம் ஜோதிடர் விஸ்வநாதன வீடு முதல் மாகாளியம்மன் கோவில் முன்புறம் மேட்டுக்கடை சாலை வரை மேம்பாடு செய்யும் பணியினையும், ரூ.5.06 இலட்சம் மதிப்பீட்டில் அண்ணமார் நகர் இரண்டாவது வீதியில் வடிகால் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.14.46 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர்பாபு, பாலு, பெருந்துறை வட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu