பவானி ஆற்றில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்
சத்தியமங்கலம் அண்ணாநகர் பவானி ஆற்றுப்படுகையில் சுமார் 2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பவானிசாகரில் மீன் குஞ்சுகளின் வளத்தினை பெருக்கிடும் நோக்கத்தோடு, பவானி ஆற்றில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை (இன்று) துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன் குஞ்சுகளின் வளத்தினை பெருக்கிடும் நோக்கத்தோடு ஆறுகளில் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலையில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மீன் வளத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி நீர்நிலைகளில் மீனவர்கள் மீன்பிடித்து தங்களது வாழ்வாதாரத்தினை மேற்படுத்திக் கொண்டு வருகிறார். அணை மற்றும் குளங்களில் மீன் உற்பத்தி செய்து வந்தனர்.
தற்போது தமிழகத்தில் உள்ள பெரிய ஆறுகளான தாமிரபரணி, காவிரி மற்றும் பவானி போன்ற ஆறுகளில் கரையோரம் இருக்கின்ற மீனவர்கள் பயன்பெறும் வகையில் நாட்டின மீன் குஞ்சுகளின் வளத்தினை பெருக்கிடும் நோக்கத்தோடு ஆறுகளில் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் கடந்த வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த வருடத்திற்கான திட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வட்டம், அண்ணாநகர், பவானி ஆற்றுப்படுகையில் சுமார் இரண்டு இலட்சம் மீன்விரலிகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் வகையிலும், நன்கு வளர்ந்த நாட்டின மீன்குஞ்சு விரலிகளான கட்லா, ரோகு, மிர்கால், கல்பாசு மற்றும் சேல்கெண்டை ஆகியவற்றை இருப்பு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏறத்தாள சுமார் 40 லட்சம் மீன்குஞ்சுகளை ஆறுகளில் விடுவதற்காக மீன்வளத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் மீன் உற்பத்தியினை பெருக்கி மீனவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பவானிசாகர் அரசு மீன் பண்ணையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி பணிகள் மற்றும் வளர்ப்பு பணிகளையும், மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சினை மீன் குளத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சத்தியமங்கலம் பகுத்தம்பாளையம், உப்புப்பள்ளம் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வகுமார், கால்நடை உற்பத்தி மைய இயக்குநர் மீனாட்சி சுந்தரம், காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் குமாரசாமி, பவானிசாகர் (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் தில்லை ராஜன், உதவி இயக்குநர்கள் கதிரேசன், கொளஞ்சிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu