ஈரோடு அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு

ஈரோடு அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

பட்டாசுகள் வெடிக்கும்போது ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் மருத்துவ குழுவினர் தயாராக இருப்பதாக ஈரோடு ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

பட்டாசுகள் வெடிக்கும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கூறி உள்ளார்.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து, திறந்தவெளியில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் கச்சிதமான பருத்தி ஆடைகள், காலணிகள் அணிய வேண்டும். பெரியவர்களின் பாதுகாப்பில் சிறுவர்-சிறுமிகள் பட்டாசு வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். சுவாச பிரச்சினை இருப்பவர்கள் பட்டாசு வெடிக்கும் பகுதிகளுக்கு வராமல் பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும்.

தீப்பெட்டிகள், லைட்டர்கள் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது. நீளமான பத்தி அல்லது எரி குச்சிகளை பயன்படுத்த வேண்டும். வாகனங்களில் பட்டாசுகளை வைத்து வெடிக்க கூடாது. சாலைகளில் செல்பவர்கள் மீது பட்டாசுகளை பற்றவைத்து வீசக்கூடாது.

பட்டாசு பற்ற வைப்பவர் சுமார் ஒரு மீட்டர் தூரத்தில் நின்று வெடிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வாளி, போர்வைகள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். பாதி எரிந்த நிலையில் உள்ள பட்டாசுகளை தண்ணீரில் போட்டு அணைத்து அப்புறப்படுத்த வேண்டும். மிதிக்க கூடாது.

மெழுகுவர்த்தி, விளக்குகள் அருகே பட்டாசுகளை வைக்க வேண்டாம். மின்கம்பங்கள் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம். பட்டாசு வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்து எதிர்பாராத வகையில் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story