ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூன்.10ல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்
Erode news- ஈரோடு மாவட்டத்தில் கோமாளி நோய் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி ஜூன் 10ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது என்று ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்தில் இருந்து தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஜூன்.6) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. கால்நடை வளர்ப்பில், கோமாரி நோய் என்பது விவசாயிகளுக்கு, பெரும் சவாலாக உள்ளது. பொதுவாக, பசு மற்றும் எருமைகளை கால் மற்றும் வாய் நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.
இந்நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் உயரும். அதனால் கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி, 2024-ம் ஆண்டில் 10.06.2024 முதல் 10.07.2024 வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்கள். வருவாய் கிராமங்கள். பேரூராட்சிகள். நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி, குழுக்கள் அமைத்து தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக, ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின். கால்நடை நோய் புலனாய்வு பிரிவில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு கோமாரி நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu