தியாகி குமரனுக்கு மணிமண்டபம்: செங்குந்த மகாஜன சங்க ஐம்பெரும் விழாவில் தீர்மானம்
ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் சமுதாய சான்றோர்களுக்கு அவிநாசி ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
பெருந்துறையில் ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் தியாகி குமரனுக்கு சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பெருந்துறை அடுத்த துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா நேற்று (29ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க மாவட்ட தலைவர் என்.நந்தகோபால் வரவேற்று பேசினார்.
மாவட்ட செயலாளர் சோழா எம்.ஆசசைத்தம்பி முன்னிலை வகித்து, சமுதாய சான்றோர்களுக்கு அவிநாசி ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிப் பேசினார். தொடர்ந்து, மாணவ மாணவியருக்கு மாநிலத் தலைவர் கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மாவட்ட சங்கத்தின் 41ம் ஆண்டு விழாவில் பழனி மற்றும் சேலம் மெய்தவப் பொற்சபை நிறுவனர் மெய்தவம் அடிகள் 17ம் நூற்றாண்டில் ஈரோட்டை கோட்டை கட்டி ஆண்ட செங்குந்தர் குல மன்னர் சந்திரமதி முதலியார் திருவுருவப் படத்தை வெளியிட்டு அவரது வரலாறு பற்றிப் பேசினார்.
விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகி குமரனுக்கு அரசு சார்பாக நினைவு அரங்கம் என்பதை மாற்றி சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய பாவடி நிலத்தை நெசவாளர்களுக்கே பாத்தியப் படுத்திப் பட்டா வழங்க அரசு ஆணை வெளியிட வலியுறுத்த வேண்டும்.
ஈரோட்டை ஆண்ட சந்திரமதி முதலியார் திருவுருவ சிலையை நகரின் முக்கிய பகுதியில் நிறுவ அரசை வலியுறுத்த வேண்டும். செங்குந்தர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் . அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் செங்குந்த சமுதாயத்திற்கு வருகிற 2026 சட்டசபை தேர்தலில் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசை வலியுறுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக காலை 10 மணிக்கு சிலம்பு, துடும்பு ஆட்டங்கள், வள்ளி கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் செங்குந்த சமுதாய சான்றோர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu