அந்தியூர் அருகே முயலை வேட்டையாடி சமைத்து உண்ண முயன்றவர் கைது..!
முயலை வேட்டையாடி சமைத்து உண்ண முயன்ற பிரகாஷை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 3 துப்பாக்கிகள், சந்தனமரக் கட்டைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அந்தியூர் அருகே முயலை வேட்டையாடி சமைத்து உண்ண முயன்றவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் இருந்து 3 துப்பாக்கிகள், முயல் கறி மற்றும் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசரகத்தையொட்டி உள்ள பகுதியான குருநாதசாமி கோவில் அருகில் உள்ள குருநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 31). இவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு உரிய அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருப்பதுடன், அவ்வப்போது வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ஈரோடு மாவட்ட வன பாதுகாப்பு படை வனச்சரகர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் ஈரோடு வன பாதுகாப்பு படை குழுவினர் மற்றும் அந்தியூர் வனச்சரகர் முருகேசன் உள்ளிட்டோர் குருநாதபுரம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குருநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் அவரது வீட்டில் முயலை வேட்டையாடி சமைப்பதற்காக வெட்டிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் வன பாதுகாப்பு படை குழுவினர் கையும் களவுமாக பிரகாஷை கைது செய்தனர். பின்னர், அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் லென்ஸ்கள் பொருந்திய 3 ஏர்கன் துப்பாக்கிகள், கத்தி, அதிக வெளிச்சம் தரக்கூடிய டார்ச் லைட்டுகள், நான்கு 3 அடி நீளம் கொண்ட சந்தன மர கட்டைகள் மற்றும் மூன்று கிலோ எடையுள்ள முயல் கறி, தோல் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, அந்தியூர் வனச்சரக அலுவலகத்திற்கு பிரகாஷ் அழைத்து வந்த வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏர்கன் துப்பாக்கிகளை பயன்படுத்தி வனப்பகுதி மட்டுமின்றி வனத்தை ஒட்டியுள்ள விவசாய தோட்டப்பகுதிகளில் முயல்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமுளிவெங்கட்ட அப்பாலநாயுடு உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த அந்தியூர் வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu