கோபி அருகே பிடிபட்ட சிறுத்தை பவானிசாகர் வனப்பகுதியில் விடுவிப்பு
பிடிபட்ட சிறுத்தை பவானிசாகர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
கோபி அருகே பிடிபட்ட சிறுத்தை, பவானிசாகர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனத்தை ஒட்டிய வெள்ளைகரடு பகுதியில் நஞ்சப்பன் என்பவரது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நஞ்சப்பன் தோட்டத்தில் வளர்த்து வந்த கால்நடைகளில் கன்று குட்டி ஒன்றை, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை வேட்டையாடி கொன்றது. அடுத்த சில நாட்களில் அருகேயுள்ள மற்றொரு விவசாய தோட்டத்தில் ஆடு ஒன்றை கடித்து கொன்று இழுத்து சென்றது.
இதனால் அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நஞ்சப்பன் தோட்டத்தின் அருகே வனத்தை ஒட்டிய பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கூண்டு வைத்து பெண் சிறுத்தை பிடிப்பட்டது. பிடிபட்ட அந்த சிறுத்தையை டி.என்.பாளையம் வனத்துறையினர் தெங்குமராடா அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர். இந்த நிலையில் மீண்டும் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நஞ்சப்பன் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்று குட்டி ஒன்றை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்று வனப்பகுதிக்குள் போட்டு சென்றது.
கால் தடங்கள் மற்றும் அடையாளங்களை வைத்து மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த டி.என்.பாளையம் வனத்துறையினர் வெள்ளை கரடு வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் மீண்டும் ஒரு கூண்டு வைத்து சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி இரவு கூண்டு வைத்திருந்த இடத்தில் உருமல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் சென்று பார்த்த போது கூண்டில் சிறுத்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினரூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கூண்டில் பிடிபட்ட ஆண் சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி சென்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில் பவானிசாகர் வனச்சரகம் மங்கலப்பட்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர். கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுத்தை அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் பாய்ந்து ஓடி சென்று மறைந்தது. முன்னதாக சிறுத்தை கூண்டில் சிக்கிய தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சிறுத்தையை காண கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது.
கொங்கர்பாளையம் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி கூண்டில் பிடிபடாமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை நேற்று பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu