அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர்- பர்கூர் மலைப்பாதை சாலையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பர்கூர் மலைப்பாதை சாலையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (12ம் தேதி) வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 68.80 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இந்த கனமழையின் காரணமாக அந்தியூர்-பர்கூர்-கர்நாடக மலைப்பாதை சாலையில் தாமரைக்கரை, நெய்க்கரை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகம்-கர்நாடகம் இடையே அந்தியூர் வழியாக செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டுனர்கள் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மரங்கள் மற்றும் மண்ணை அகற்றி இன்று காலை போக்குவரத்தை சீமைத்தனர். பின்னர், இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலையில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி மரங்கள் மற்றும் மண் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu