சினிமா போர்வையில் கமல்ஹாசன் மக்களை ஏமாற்றுகிறார்: செல்லூர் ராஜூ கிண்டல்

சினிமா போர்வையில் கமல்ஹாசன் மக்களை ஏமாற்றுகிறார்: செல்லூர் ராஜூ கிண்டல்
X

ஈரோடு கிழக்குத் தொகுதியில் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

சினிமாவைப் போல் பிரச்சாரத்துக்கு கமலஹாசன் ஒரு நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போன்று இதுவரை நான் ஒரு தேர்தலை பார்க்கவில்லை. இந்த தேர்தலை பார்க்க அதிசயமாக இருக்கு. அமைச்சர்கள் அனைவரும் காரில் பவனி வருகிறார்கள். தலைமைச் செயலகத்துக்கு சென்றால் கூட அவர்களை பார்க்க முடியாது. தற்போது எளிதாக பார்க்க முடிகிறது. ஈரோடு மக்கள் அன்பானவர்கள், பாசமானவர்கள். கோபப்பட்டால் கூட அன்பாக பதில் சொல்லக்கூடியவர்கள். நீங்கள் அண்ணா திமுகவுக்கு ஓட்டு போட தயாராகி விட்டீர்கள்.

நேற்று பிரச்சாரத்தில் கமல்ஹாசன் இந்திய தேசத்திற்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக கூறியுள்ளார். அப்படி என்ன அச்சுறுத்தல் வந்துவிட்டது. பாகிஸ்தான் நம் மீது படையா எடுக்க போகிறது. கமல்ஹாசன் நல்ல நடிகர். அவர் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்துள்ளேன். நன்றாக நடித்துள்ளார். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு. எல்லாராலும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. கமலஹாசன் சினிமாவில் கால்ஷீட் கொடுப்பது போல் ஒருநாள் பிரச்சாரத்திற்கு கால் ஷீட் கொடுத்து உள்ளார். நடிகர் சிவாஜியே கட்சியை தொடங்கி அது சரிப்பட்டு வராததால் கலைத்து விட்டார். இவர் எம்மாத்திரம். சினிமா போர்வையில் மக்களை ஏமாற்றுகிறார்.

அதிமுக 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்து உள்ளது. ஆனால் மக்கள் மீது எந்த ஒரு வரியும் திணிக்கவில்லை. திமுக ஆட்சி ஏற்றதும் சொத்துவரிவு மின் கட்டண உயர்வு பால் விலை உயர்த்திவிட்டது. விடியா ஆட்சியால் நீங்கள் தவித்து வருகிறீர்கள்.தவறானவர்களிடம் ஆட்சியை கொடுத்ததால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

அதிமுகவின் பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்திவிட்டனர். கொரோனா காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்து இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக சென்று மக்களை சந்தித்தார். பல்வேறு நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்தது. ஆனால் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் மக்களை சந்தித்து பேசினார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினருக்கு தகுந்த பாடம் புகட்டி அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி