கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள்: ஈரோட்டில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய போது எடுத்த படம்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து, ஈரோட்டில் அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (24ம் தேதி) தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டம் நடத்த கொண்டுவரப்பட்ட லாரியை திருப்பி அனுப்பினர். மேலும், அங்கிருந்த பேனர்களையும் அவிழ்த்து விட்டதால் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? என சந்தேகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து அங்குத் திரண்டு இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு ஒன்றிணைந்து வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில், ஈரோடு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான கே.ஏ செங்கோட்டையன், கே. சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும், இதை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி பழனிசாமி, பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu