அந்தியூரில் செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள்.

பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதலை கண்டித்து, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதலை கண்டித்து, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு என்பவரை மர்ம கும்பல் ஒன்று நோட்டமிட்டு வந்து உள்ளது. இந்த நிலையில், கடந்த 24ம் தேதி (நேற்று முன்தினம்) நேசபிரபு வீட்டில் இருந்து வெளியே வந்ததைப் பார்த்த, பதிவெண் இல்லாத இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், நேசபிரபுவை விரட்டி சென்று அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் வைத்து அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்த நேசபிரபு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நேசபிரபு, மர்ம கும்பல் தன்னை நோட்டமிடுவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் காமநாயக்கன்பாளையம் காவல் துறையினரிடம் கூறியும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை சங்கங்கள், ஊடகவியலாளர்கள் காவல் துறையினரின் அலட்சியத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், பத்திரிக்கையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, அந்தியூர் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் ஒன்றிணைந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!