இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வருவது சிரமம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
ஈரோடு காங்கிரஸ் கமிட்டி அலுவகத்தில் நடைபெற்ற மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.
இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வருவது சிரமம் என்று ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ கூறினார்.
ஈரோட்டில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மகிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சையது ஹசீனா தலைமையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்றார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நடிகர் விஜயின் கொள்கைகள் என்ன.?, எதற்காக கட்சி ஆரம்பிக்கிறார் என்றே தெரியவில்லை. ஜாதி ,மதம், மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கக்கூடிய ஒரு நடிகர். அவர் கட்சி ஆரம்பித்து தன்னை ஒரு சிறு வட்டத்துக்குள் சுருக்கி கொள்கிறார்.
இது போன்ற கட்சி ஆரம்பித்த பல நடிகர்கள் காணாமல் போய்விட்டனர். அவர் மக்களுக்காக வலியுறுத்தக்கூடிய கொள்கைகளைக் கொண்ட கட்சியில் இணைந்து செயலாற்றி இருக்கலாம். தனி ராஜ்ஜியம் கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் விமர்சித்தார் .
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வருவது சிரமம் என்றும் தன்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் கள்ளு கடைகளை திறப்பது நல்லது. அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் கூறினார்.
மேலும், அதிமுக தனது வாக்கு வங்கியில் 20 சதவீதத்தை இழந்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் மகளிர் அணியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu