இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஈரோடு ஆட்சியர் தகவல்

இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஈரோடு ஆட்சியர் தகவல்
X

தையல் இயந்திரம் (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக நலத்துறையின் சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர்ரக தையல் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 6 மாத கால தையல் பயிற்சி, சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி, தமிழக அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் தையல் பயிற்சி, தீன்தயாள் உபாத்யாய கௌசல்ய யோஜனா திட்டத்தில் தையல் பயிற்சி பெற்ற சான்று, ஜிக் ஜாக், சைக்கோ, எம்பிராய்டரி ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றதற்கான சான்று, இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வட்டாட்சியரால் வழங்கப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ளதற்கான சான்று, வயது சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகிய சான்றுகளுடன் இ-சேவை மைய இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இது குறித்த தகவலுக்கு சம்மந்தப்பட்ட வட்டாரத்திலுள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story