ஈரோடு மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 36 அரசு விடுதிகளில் சேர்ந்து தங்கி படிக்க தகுதியான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 36 அரசு விடுதிகளில் சேர்ந்து தங்கி படிக்க தகுதியான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பள்ளி மாணவர்களுக்கு சிவகிரி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கோபி, சென்னிமலை. வெள்ளோடு, நம்பியூர், சத்தி, பு.புளியம்பட்டி, தாளவாடி, அறச்சலூர், மலையப்பாளையம், அந்தியூர், குருவரெட்டியூர், தேவர்மலை, காவிலிபாளையம் ஆகிய 16 விடுதிகள் செயல்படுகின்றன.

பள்ளி மாணவிகளுக்கு அவல்பூந்துறை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, அத்தாணி, காவிலிபாளையம், பவானி, குருவரெட்டியூர், மூங்கில்பட்டி, சத்தி, பங்களாப்புதூர் ஆகிய 11 விடுதிகளும் செயல்படுகின்றன. அதேபோல், கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஈரோடு, கோபி, பெருந்துறை, வேலம்பாளையம், அந்தியூரில் 5 விடுதிகளும், மாணவிகளுக்கு சித்தோடு, கோபி, பு.புளியம்பட்டி, திட்டமலை ஆகிய விடுதிகளும் செயல்படுகிறது.

பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் ஆவர். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளும் 3 வேளை உணவு, தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்தும் பொருட்டு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். மேலும், கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஜமுக்காளம், பள்ளி விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பாய்களும், மலைப் பகுதியில் உள்ள விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கம்பளி, மேலாடைகள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த, விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த, தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்தோ அல்லது ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தில் 4வது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று பயன் பெறலாம்.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கு விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நாளைக்குள் (ஜூன்.14) கல்லூரி விடுதிகளுக்கு வரும் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்று அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

இதேபோல், ஒவ்வொரு விடுதியிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அரசின் விடுதிகளில் சேர்க்கைக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story