மகளிர் உரிமைகள் யாவும் போராடிப் பெற்றவையே: ஸ்டாலின் குணசேகரன் பேச்சு..!

நந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பேசிய மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன்.
இன்றளவும் மகளிர்க்குக் கிடைக்கப்பெற்ற உரிமைகள் யாவும் உலக அளவிலான போராட்டங்கள் மூலம் பெற்றவையே என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசியுள்ளார்.
செல்வா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில், உலக மகளிர் தின விழா ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கூரைபாளையத்தில் உள்ள நந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்று காலந்தோறும் பெண்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, அவர் பேசியதாவது, சதி என்று சொல்லப்படும் உடன்கட்டை ஏறுதல் கொடுமை இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. வட இந்தியாவில் அதிக அளவில் வழக்கத்தில் இருந்தாலும் தமிழ்நாட்டிலும் அப்பழக்கம் பரவலாக இருந்துள்ளது. அரச குடும்பத்துப் பெண்கள் பலர் அவ்வாறான உடன்கட்டை ஏறுதலால் கணவனின் சடலத்தோடு எரிக்கப்பட்டுள்ளனர்.
ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்ட பலரும் பல்லாண்டுகள் தொடர்ந்து போராடித்தான் அக்கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. 1829ல் வில்லியம் பெண்டிஸ் என்ற ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் சதி ஒழிப்புச் சட்டத்தை இயற்றினார். சுமார் 195 ஆண்டுகளுக்கு முன்பு வரை சட்டம் இயற்றித் தடுக்க முடியாத அளவுக்கு மக்களிடம் இப்பழக்கம் இருந்துள்ளதை இன்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
பெண்களுக்கான வாக்குரிமை உலகின் பல முன்னேறிய நாடுகளிலேயே ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மறுக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு உலகு தழுவிய பெரும் போராட்டங்கள் பல பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றது. பிரிட்டிஷ் இந்தியாவிலும் வாக்குரிமையைப் போராட்டம் வலிமையாக நடைபெற்றது. 1921ல் சென்னை மாகாணத்தில் தான் முதன் முதலாக பெண்கள் வாக்குரிமைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட பின்னரும் தேர்தலில் நிற்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது.
1926ல் தான் பெண்கள் ஆண்களைப் போல தேர்தலில் போட்டியிடலாம் என்ற உரிமையைப் பெற்றனர். அதற்குத் தனியாக அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் நிலவியது. இப்படி கல்வியுரிமை, சொத்துரிமை, வேலையுரிமை என்று ஒவ்வொரு உரிமைக்கும் மகளிர் மாநாடு, பேரணி, போராட்டம், இயக்கம் என்று தொடர்ந்து நடத்தித் தான் படிப்படியாக உரிமைகளைப் பெற்றுள்ளனர். மகாகவி பாரதி, மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பாரதிதாசன் போன்ற பல முக்கிய ஆளுமைகள் அவ்வப்போது பெண்ணுரிமைக்காக வலுவாகக் குரல் கொடுத்து வந்தனர்.
சென்னை மாகாண முதல்வராக விளங்கிய டாக்டர் சுப்பராயனின் மனைவி ராதாபாய் சுப்பராயன் லண்டனில் நடைபெற்ற இரண்டு வட்டமேசை மாநாடுகளிலும் இந்தியப் பெண்கள் சார்பாகப் பங்கேற்று மகளிர்க்கு இட ஒதுக்கீடு பற்றி ஓங்கிக் குரல் கொடுத்துள்ளார். இப்படி எத்தனையோ பேர் கட்சி, ஜாதி, மத எல்லைகளைத் தாண்டி அந்தந்த காலகட்டங்களில் பங்களிப்புச் செலுத்தியே இன்றைய மகளிர் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளனர் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு, நந்தா கல்வியின் நிறுவனத்தின் தலைவர் சண்முகன், தலைமை வகித்தார். மகாத்மா மெமோரியல் நர்சரிப் பள்ளியின் தாளாளர் ஜெயகுமார், கல்லூரி முதல்வர் மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக செல்வா சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் பாரதி வரவேற்புரை ஆற்றினார். முடிவில், நந்தா கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் கோமதி நன்றி கூறினார்.
பெண்கள் உரிமையில் சிறு கண்ணோட்டம்
உலக மகளிர் தினம்: பெண்களின் உரிமைகள் - ஒரு போராட்டத்தின் வரலாறு
பெண்களின் உரிமைகள் யாவும் போராட்டத்தின் மூலம் பெறப்பட்டவை என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உலக மகளிர் தின விழாவில் பேசியுள்ளார்.
சதி என்று அழைக்கப்பட்ட உடன்கட்டை ஏறுதல் கொடுமை, வாக்குரிமை, கல்வியுரிமை, சொத்துரிமை, வேலையுரிமை என ஒவ்வொரு உரிமைக்கும் பெண்கள் பல போராட்டங்களை நடத்திப் பெற்றவை என்று அவர் விளக்கினார்.
சதி 19 ஆம் நூற்றாண்டில் ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் போராட்டத்திற்குப் பிறகே தடை செய்யப்பட்டது. 1829ல் வில்லியம் பெண்டிஸ் சட்டம் இயற்றினார்.
பெண்களுக்கு வாக்குரிமை உலகின் பல முன்னேறிய நாடுகளிலேயே ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மறுக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் 1921ல் சென்னை மாகாணத்தில் தான் முதன் முதலாக பெண்கள் வாக்குரிமைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 1926ல் தேர்தலில் போட்டியிடும் உரிமை பெற பெண்கள் போராட வேண்டியிருந்தது.
மகாகவி பாரதி, மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பாரதிதாசன் போன்ற பல முக்கிய ஆளுமைகள் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தனர். டாக்டர் சுப்பராயனின் மனைவி ராதாபாய் சுப்பராயன் லண்டனில் நடைபெற்ற இரண்டு வட்டமேசை மாநாடுகளிலும் இந்தியப் பெண்கள் சார்பாகப் பங்கேற்று மகளிர்க்கு இட ஒதுக்கீடு பற்றி ஓங்கிக் குரல் கொடுத்துள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு பலர் கட்சி, ஜாதி, மத எல்லைகளைத் தாண்டி பங்களிப்புச் செலுத்தியுள்ளனர் என்று ஸ்டாலின் குணசேகரன் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் நந்தா கல்வியின் நிறுவனத்தின் தலைவர் சண்முகன், மகாத்மா மெமோரியல் நர்சரிப் பள்ளியின் தாளாளர் ஜெயகுமார், கல்லூரி முதல்வர் மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செல்வா சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் பாரதி வரவேற்புரை ஆற்றினார். நந்தா கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் கோமதி நன்றி கூறினார்.
பெண்களின் உரிமைகள் என்பது ஒரு போராட்டத்தின் மூலம் பெறப்பட்டவை. இதை நினைவில் கொண்டு, அனைத்து பெண்களும் சமூகத்தில் சம உரிமையுடன் வாழ்வதற்கு பாடுபடுவோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu