ஈரோடு கிழக்குத் தொகுதியில் தபால் வாக்கு பெறும் பணி: தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஆண்டவர் வீதியில் தபால் வாக்கு பெறும் பணியினை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு பதிவு செய்யும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேர்தலில் ஓட்டு சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 209 நபர்கள் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என 256 வாக்காளர்கள் தபால் வாக்கு பதிவு செய்ய ஒப்புதல் பெறப்பட்டது.
இதனையடுத்து, சம்மந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தவாறே வாக்களிக்க ஏதுவாக வாக்காளரின் குடியிருப்பு பகுதிக்கு வாக்குச்சாவடி அலுவலர் குழு வாக்காளர் வீட்டுக்குச் சென்று வாக்காளர் அடையாளத்தை சரிபார்த்து, அவ்விபரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பம் மற்றும் கைரேகை பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி, அஞ்சல் வாக்குச்சீட்டினை வழங்கி, தபால் வாக்கு பெறும் பணி இன்று (ஜன.23) தொடங்கியது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம் ஆண்டவர் வீதியில் 85 வயதான காளியப்பன் தபால் வாக்கு பதிவு செய்ததை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பெரியவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்குசாவடியினை பார்வையிட்டு, கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பழையபாளையம் பண்ணை நகர் பகுதியில் பறக்கும்படை குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டு வருவதையும், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu