ஈரோடு மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாதவர்கள் பற்றி தெரிவிக்க வேண்டுகோள்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் இருப்பின் அருகாமையில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
வயது வந்தோர் கல்வித் திட்டம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் இருப்பின் அருகாமையில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில், வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு, முற்றிலும் எழுதப், படிக்கத் தெரியாதவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அதன்படி 2024-2025ம் கல்வியாண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 14 ஒன்றியங்களிலும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை ஒட்டிய அனைத்து குடியிருப்பு பகுதிகளில் கற்போர் மற்றும் தன்னார்வலர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
இம்மையங்களில் கற்போருக்கு சிலேட், பென்சில் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு 6 மாத கால பயிற்சியானது பள்ளி வேலை நாட்களில் தினமும் இரண்டு மணி நேரம் தன்னார்வலர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டு இறுதியில் தேர்வுகள் வைக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
இப்பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, தங்கள் பகுதியில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் இருப்பின் அருகாமையில் உள்ள தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu