100 சதவீதம் வெற்றி பெறுவேன்: அதிமுக வேட்பாளர் தென்னரசு பேட்டி
வாக்களித்த பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக வேட்பாளர் தென்னரசு.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நான் 100 சதவீதம் வெற்றி பெறுவேன் என்று அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம், விநாயகர் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மக்கள் விறுவிறுப்பாக வாக்கு பதிவு செய்து வருகின்றனர். தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என 100 சதவீத நம்பிக்கை உள்ளது. 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நன்றாக செய்துள்ளது. வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை அழிவதாக சில இடங்களில் புகார் வந்துள்ளது.
இது குறித்து முறையிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் இருக்கும். திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும் சண்டை சச்சரவு வராது. அடிமட்ட தொண்டர்களுக்குள் சண்டை வருமே தவிர தலைவர்களுக்குள் சண்டை வராது. எனவே தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. இன்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக எனக்கு தகவல் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகமாக இருப்பதால் வாக்கு பதிவு தாமதமாகிறது. அதை விரைவுபடுத்துமாறு கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாக்கை செலுத்தி விட்டு மற்ற வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை கே.எஸ். தென்னரசு கண்காணித்தார். அப்போது கிருஷ்ணாபாளையம் 25 வது வார்டில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மந்தமாக செயல்படுவதாகவும் வாக்காளர்களை வெகுநேரம் காத்திருக்க வைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu