எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது? தமிழக முதல்வருக்கு த மா கா கேள்வி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜா.
தமிழ்நாடு வந்து தொழில் தொடங்கியுள்ள நிறுவனங்களில் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது? என்ற விவரத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமாகா மாநில பொதுச் செயலாளர் யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தனியார் துறை மூலம் தொழில் தொடங்க முதலீடு பெறுவதாக கூறிக்கொண்டு தமிழக முதலமைச்சர் அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு வருகிறார். ஒரு முதல்வரே மாநிலத்தின் வளர்ச்சிக்காக முன்னின்று இது போன்ற பயணங்கள் மேற்கொள்வது, முன்னாள் முதலமைச்சர்கள் வழியில் தமிழக முதல்வர் முதலீட்டாளர்களை ஈர்க்க மாநாடு நடத்தி அதன் மூலம் முதலீட்டை பெருக்குவது என்பது வழக்கமான ஒன்றாகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு துபாய்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் போது ரூ.6,100 கோடி ரூபாய்க்கு முதலீடுகளும், அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. சென்னையில் கடந்த 2024 ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 6,64,180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மூன்றாண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் என முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்கிறது, ஆனால் அங்கு ஈர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை, பாதியளவு கூட செயல்பாட்டுக்கு வராத நிலையில் முதலமைச்சரின் தொடர்ச்சியான வெளிநாட்டுப் பயணங்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன.
முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் புதிதாக எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது? என்பதோ அதன் மூலம் எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்? என்பதோ விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. எவ்வளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வந்து தொழில் தொடங்கியுள்ளன? எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது? தற்போதுவரை எந்த நகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன? என்ற விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகள் பற்றி இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அறிவிப்புகள் தான் வருகின்றனவே தவிர, அந்த அறிவிப்பு எந்தளவுக்கு அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கத் தொடங்கியது என்பது பற்றி தகவல்கள் இல்லை அது ஏன்? வெளிநாட்டில் இருந்து தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவது அவசியம். வெளிநாட்டு முதலீடு குறித்த தகவல்களை அடிக்கடி வெளியிடுவதால் மட்டுமே, மக்கள் மனதில் இடம்பிடித்துவிட முடியாது.
அவற்றின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் எந்த அளவுக்கு உருவாகி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்யவேண்டும். இல்லையென்றால் இது வழக்கம் போல் திமுக மக்களை ஏமாற்றுவது போல் தொழில் முதலீட்டாளர்கள் விஷயத்திலும் மக்களை ஏமாற்றுவதாகவே அர்த்தமாகும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu