கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 31,000 கன அடியாக உயர்வு
பவானிசாகர் அணை பகுதி.
நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 31,939 கன அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்தது. மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து 64 அடிக்கும் கீழே சென்றது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
புதன்கிழமை (நேற்று) வரை அணைக்கு நீர் வரத்து 6,574 கன அடியாக இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 31,939 கன அடியாக உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை (நவ.9) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-
நீர் மட்டம் - 70.96 அடி ,
நீர் இருப்பு - 11.35 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 31,939 கன அடி ,
நீர் வெளியேற்றம் - இல்லை ,
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் 92.0 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu