அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா கொடியேற்றம்..!
சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் குருநாதசுவாமி. அடுத்த படம்:- ஆடித்தேர் திருவிழாவுக்கு கொடியேற்றப்பட்டது.
அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோவில் ஆடித்தேர் திருவிழாவுக்கு இன்று (24ம் தேதி) கொடியேற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடப்பாண்டு ஆடித்தேர் திருவிழா, கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, இன்று (24ம் தேதி) காலை 11 மணிக்கு புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, பெருமாள் சுவாமி, காமாட்சியம்மன், குருநாதசுவாமிகளின் வெள்ளிக் கவசம் மற்றும் பூஜைப் பொருட்கள் அடங்கிய மூங்கில் பெட்டகத்தை சுமந்து வனக் கோயிலுக்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயர மூங்கில் கம்பத்தில் கொடி கட்டி, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து கொடிக் கம்பத்தை நிலை நிறுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வரும் 31ம் தேதி முதல் வன பூஜை நடைபெற உள்ளது. இதனையடுத்து, அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதி தேர்த்திருவிழாவுடன், தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தை தொடங்கி, 10ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், இதில் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu