காதலனை திருமணம் செய்து வைக்கக்கோரி இரண்டாவது நாளாக பட்டதாரி பெண் தர்ணா

காதலனை திருமணம் செய்து வைக்கக்கோரி  இரண்டாவது நாளாக பட்டதாரி பெண் தர்ணா
X

அந்தியூர் அருகே அண்ணா நகரில் உள்ள காதலன் பிரபாகரன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சிவரஞ்சனியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்தியூர் அருகே காதலன் வீட்டின் முன் பட்டதாரி பெண் 2வது நாளாக ஞாயிற்றுக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தியூர் அருகே காதலித்து திருமணம் செய்ய மறுக்கும் காதலன் வீட்டின் முன் பட்டதாரி பெண் 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சமத்துவபுரம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). என்ஜினீயரிங் படித்து உள்ளார். டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல் அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 24). இவரும் என்ஜினீயரிங் படித்து உள்ளார். அந்தியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். பிரபாகரனும், சிவரஞ்சனியும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததால், பிரபாகரனின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரபாகரன் சிவரஞ்சனியிடம் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து சிவரஞ்சனி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். போலீசார் 2 பேரையும் அழைத்து பேசியுள்ளனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

அப்போதும் பிரபாகரன், சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறினார். தொடர்ந்து மீண்டும் கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்து இருந்தனர். ஆனால் பிரபாகரன் சிவரஞ்சனியை திருமணம் செய்ய மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் திருமணம் செய்ய சம்மதித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்.

இதை தொடர்ந்து பவானி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசி, அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி 'மற்றும் பெண் போலீசார் அந்த பெண்ணை தனியாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் மறுத்து விட்டார். இதையடுத்து நேரம் செல்ல, செல்ல சிவரஞ்சனி சோர்வாக காணப்பட்டார். அவர் போலீசாரிடம் மயக்கம் வருவதாக கூறினார். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த பெண்ணுக்கு போலீசார் உணவு அளித்தனர். இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பெண்ணின் காதலர் பிரபாகரனுக்கு, போலீசார் போன் செய்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வருவதாக கூறினார். ஆனால் அவர் அங்கு வரவில்லை. இதை தொடர்ந்து பெண்ணிடம் போலீசார் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் பிரபாரன் சம்பவ இடத்துக்கு வந்தால் தான் போவேன் என கூறி தொடர்ந்து அவரது வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இரவு நேரம் ஆகிவிட்டதால் சிவரஞ்சனியுடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் பிரபாகரன் வீட்டு முன்பு அமர்ந்து விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து இன்று காலையும் அந்த பெண் அவரது காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!