ஈரோடு: இலவச பயண அட்டையை பறித்துக் கொண்ட அரசு பேருந்து நடத்துநர்; மாற்றுத்திறனாளி போராட்டம்
Erode news- மாற்றுத்திறனாளி மாரசாமி.
Erode news, Erode news today- அரசு பேருந்தில் இலவச பயணத்துக்கு அனுமதி மறுத்து அடையாள அட்டையை பறித்துக் கொண்ட நடத்துநரை கண்டித்து , இரவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி போராட்டம் நடத்தியது பவானி லட்சுமிநகரில் பெரும் பரபரப்பானது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாரசாமி (வயது 55). இவர் சோப்பு, சோப்பு பவுடர் மற்றும் ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் விற்பனை செய்து, அதில் வரும் வருமானம் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இவருக்கு அரசு சார்பில் பேருந்தில் பயணம் மேற்கொள்ள கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று அவிநாசியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறி உள்ளார்.
இதில், ஏறிய மாரசாமி அவிநாசியில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையம் வரை பத்து ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்று பயணம் செய்துள்ளார். தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திற்குள் தான் இலவச பேருந்து பயண அட்டை இருக்கிறதே என நினைத்து பெருந்துறையில் இருந்து அதே பேருந்தில் பவானி அருகே உள்ள லட்சுமிநகர் வரை பயணம் மேற்கொள்ள அதே பேருந்தில் நடத்துநரிடம் தனது இலவச பேருந்து பயண அட்டையை காண்பித்துள்ளார்.
இந்த நிலையில் பயண அட்டையை வாங்கிய அரசு பேருந்து நடத்துநர் மாற்றுத்திறனாளி மாரசாமியிடம் இது சேலம் மண்டல அரசு பேருந்து என்றும் இதில் இலவசமாக தாங்கள் பயணம் மேற்கொள்ள முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவருக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, மாரசாமியின் பயண அட்டையை அந்த நடத்துநர் வாங்கி வைத்து கொண்டதாகவும் தெரிகிறது. அதற்குள் அந்த பேருந்து நிறுத்தம் லட்சுமிநகர் வந்துவிட்டது. அங்கு மாரசாமி இறங்கிய பிறகும் பேருந்து பயண அட்டையை நடத்துநர் கொடுக்காமல் வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, லட்சுமிநகர் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் மாற்றுத்திறனாளி மாரசாமி கூச்சலிட்ட படி பேருந்தில் இருந்து இறங்கி பேருந்து முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதனை வாகன சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் நடத்துநரிடம் இருந்து அடையாள அட்டையை பெற்று மாரசாமியிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் பேருந்து இயக்க பேருந்து நடத்துநர் பேருந்தில் ஏறி சென்றுள்ளார். மாரசாமி போலீசாரிடம் பேருந்து நடத்துநர் தனது இலவச பயண அட்டையை பறித்து குருடன் என சக பயணிகள் மத்தியில் தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறியதாவும் உங்களுக்கெல்லாம் யார் இந்த அடையாள அட்டை வழங்கினார்கள் என பேசிதாகவும் கூறி தொடர்ந்து மாரசாமி போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நெடுஞ்சாலையில் வாகனங்களை செல்ல விடாமல் ஒற்றை மனிதராக நின்று போராட்டத்தை தொடர்ந்தார். தொடர்ந்து போலீசார் நெடுஞ்சாலையில் வந்த வாகனங்களை மாற்று பாதை வழியாக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல் ஆய்வாளர் ரவி மற்றும் பவானி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாராசாமியிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மாற்றுத்திறனாளி மாரசாமி போராட்டத்தை கைவிட்டார். இதன் பிறகு மாற்றுத்திறனாளியை லட்சுமி நகர் காவல் சோதனச்சாவடிக்கு அழைத்து சித்தோடு போலீசார் அவரிடம் புகார் மனுவினை பெற்றனர். சம்பவம் குறித்து காவல் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது மாற்றுத்திறனாளி மாராசாமி ஈரோடு மாவட்டத்திற்குள் கோவை மண்டல அரசு பேருந்துகளில் மட்டுமே பயணம் மேற்கொள்ளும் வகையில் இலவச பேருந்து பயண அட்டையை வைத்துள்ளார். ஆனால் இவர் சேலம் போக்குவரத்து கழக பேருந்தில் ஏறியுள்ளார்.
இந்த நிலையில் பேருந்துக்குள் என்ன நடந்தது என முழுமையாக தெரியாது. தற்போது மாற்றுத்திறனாளி மாராசாமியின் வாக்குமூலம் மட்டுமே உள்ளது. தொடர்ந்து பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரை வரவழைத்து விசாரித்தால் தான் பேருந்தில் என்ன நடந்தது என முழுமையாக தெரியவரும் என தெரிவித்துள்ளனர். பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக சித்தோடு போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu