நாட்டுக்கோழி பண்ணை மானியத்தில் அமைக்க ஈரோடு ஆட்சியர் வேண்டுகோள்
நாட்டுக்கோழி பண்ணை (கோப்புப் படம்).
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 1 பட்டியல் வகுப்பு, பழங்குடியினர் உட்பட 3 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கான கோழிக் கொட்டகை கட்டுமானச் செலவு. உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு மற்றும் தண்ணீர் தட்டு) மற்றும் மாதங்களுக்கு தேவையான 4 தீவனச்செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 விழுக்காடு மானியம் (ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 875) மாநில அரசால் வழங்கப்படும்.
திட்டத்தின் மீதமுள்ள 50 விழுக்காடு பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். கட்டுமானப் பணிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
விதவைகள், ஆதரவற்றோர். திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பட்டியல் வகுப்பு/பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளில் பயானாளிகளோ அவர்தம் குடும்பத்தினரோ நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின்கீழ் பயனடைந்திருக்கக் கூடாது.
இத்திட்டத்தில் பயனடைய விருப்பமும் தகுதியும் உள்ளோர் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/அடங்கல் நகல், 50 விழுக்காடு தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழியுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி வரும் ஜூலை 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு கோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 94439 41443 என்ற அலைபேசி எண்ணிலும், கோபிசெட்டிபாளையம் கோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 98427 59545 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu