ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் ஏமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி மாவட்டம் முழுவதும் 66 மையங்களில் போடப்பட்டு வந்தது. ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 56 இடங்களிலும் என மொத்தம் 66 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், அவர்கள் சிரமமின்றி தடுப்பூசி போடும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த வியாழக்கிழமை முதல் போடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் தலா 20 வார்டுகள் வீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைப்போல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் மையம் அதிகரிக்கப்பட்டு தினமும் 110 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அறியாமல் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திங்கட்கிழமை தடுப்பூசி வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தடுப்பூசிகள் வரவில்லை. அதனை தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்றும் தடுப்பூசிகள் வராமல் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu