கொடிவேரி அணையில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக இந்த அணை இருந்து வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்காக விடப்பட்டு வருகிறது. சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் கொட்டும் இந்த அணையில் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதால் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 104 அடியை நெருங்கி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அனைத்து வரும் உபரி நீர் பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தற்போது பவானி ஆற்றுக்கு 8 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கொடிவேரி அணையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாகவும் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu