கொரோனா மையமாக செயல்படும் தனியார் பள்ளி மாணவியர் விடுதி: பெற்றோர்கள் அச்சம்
பைல் படம்.
ஈரோடு மாவட்டம் கோபியில் தனியார் நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, மாணவியர் தங்கும் விடுதி வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு வரை மொத்தம் 700 மாணவியர் பயில்கின்றனர். இதே பள்ளி வளாகத்தில் இயங்கும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, மொத்தம், 450 மாணவியர்கள் பயில்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதி, வருவாய்த்துறை ஏற்பாட்டில் கடந்த 1ம் தேதி முதல், கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது.
அங்குள்ள 48 விடுதி அறையில், நேற்றைய நிலவரப்படி, 40 கொரோனா நோயாளிகள் 24 மணி நேரமும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதி முழுக்க, தடுப்புகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல், இப்பள்ளிக்கு ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவியர் வரவுள்ளனர். குறிப்பாக, துவக்க வகுப்புகளை சேர்ந்த மழலைகள், வகுப்பறைக்குள் காலடி வைக்க உள்ளனர். இச்சூழலில் பள்ளி வளாகத்தில், கொரோனா மையம் இயங்குவதால், குழந்தைகளுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என பெற்றோர் மத்தியில் ஒருவித அச்சத்தை கிளப்பியுள்ளது.
தடுப்பு அமைந்துள்ள பகுதியில், கழிப்பிடம் மற்றும் கைகழுவும் பகுதிக்கு குழந்தைகள் செல்ல வேண்டியுள்ளது. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் நிலவுவதால், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, போர்க்கால அடிப்படையில், கொரோனா மையத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ., பழனிதேவி கூறுகையில், இது தொடர்பாக எங்களுக்கும் தகவல் வந்துள்ளது. எனவே இப்பிரச்னை குறித்து, ஈரோடு கலெக்டரின் கவனத்துக்கு, தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu