கோழிப்பண்ணை மோசடி: இருவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.1.65 கோடி அபராதம்
கார்த்திகா மற்றும் பிரபு
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் , 2012ஆம் ஆண்டு இயங்கி வந்த ஹெல்தி பவுண்டரி பார்ம்ஸ் என்ற நிறுவனம் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.
அதில், ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால், ஒரு செட் அமைத்து, 500 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் கொடுத்தும், அதற்கு தேவையான தீவனங்கள், மருந்துகள் கொடுத்து, மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூபாய் 8 ஆயிரத்து 500 வழங்கப்படும். வருட முடிவில் ஊக்கத்தொகையாக ரூபாய் 8 ஆயிரத்து 500 தருவதாக ஒரு திட்டமும், ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால், ஒரு செட் அமைத்து, 300 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் கொடுத்தும், அதற்கு தேவையான தீவனங்கள், மருந்துகள் உட்பட மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூபாய் 8 ஆயிரத்து 500 வழங்கப்படும் வருட முடிவில் ஊக்கத்தொகையாக ரூபாய் 12 ஆயிரம் தருவதாக வி.ஐ.பி திட்டம் என இரு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
இந்த திட்ட அறிவிப்பை நம்பி, இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தது போல் உரிய தொகையை வழங்காமல் ஏமாற்றியதை அறிந்து, கோபியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் அளித்த புகாரில், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், 99 முதலீட்டாளர்களிடம் ரூபாய் ஒரு கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது இதையடுத்து, நிறுவனத்தை நடத்தி வந்த இயக்குனர்களான கார்த்திகா, பிரபு மற்றும் நிறுவனத்தில் பணியாற்றிய 6 பேர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நிறுவனத்தை நடத்தி வந்த கார்த்திகா மற்றும் பிரபு ஆகிய இருவருக்கும், தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 கோடியே 65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வழக்கில் சேர்க்கப்பட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu