நம்பியூரில் பலத்த மழை: குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
நம்பியூர் பகுதியில் பெய்த பலத்த மழையில் சேதமடைந்த தரைப்பாலம்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி ராஜீவ் காந்தி நகர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.கடந்த சில நாட்களாக நம்பியூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நம்பியூர் ராஜீவ்காந்தி நகருக்கு அருகில் உள்ள குளங்கள் நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய விடிய நேற்று காலை வரைநீடித்தது. இதனால் ராஜீவ்காந்தி நகருக்கு அருகே உள்ள குளங்களில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது. மேலும் மழைநீரும் குளத்து தண்ணீருடன் கலந்ததால் வெள்ளம் கரைபுரண்டு ராஜீவ்காந்தி நகருக்குள் புகுந்தது. நள்ளிரவில் திடீரென குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். பின்னர் அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர். இதற்கிடையே இதுகுறித்த தகவல் நம்பியூர் தாசில்தார் மாரிமுத்துவுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் மாரிமுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருடன் விரைந்து சென்றார். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu