லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
X

லஞ்சம் வாங்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணை தாசில்தார் அழகேசன், கிராம நிர்வாக அதிகாரி ராம்ஜி.

நம்பியூரில் விவசாய நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருக்கு சொந்தமாக இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.இந்த நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்காக நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்காக மெய்த்தன்மை சான்று பெற எலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராம்ஜி (வயது 50) என்பவரை ரத்னசாமி அணுகியுள்ளார். அப்போது அவர் சான்றிதழ் அளிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரத்தினசாமி இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டை ரத்னசாமிடம் கொடுத்து இதை லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்க வலியுறுத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியது போல் ரத்தினசாமி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை ராம்ஜியிடம் கொடுத்தார். அப்போது அந்த பணத்தை அங்கிருந்த முத்துகுமார் என்பவரிடம் ராம்ஜி அளித்தார். அதே நேரம் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து ராம்ஜியையும், முத்துக்குமாரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நம்பியூர் துணை தாசில்தார் அந்தியூரை சேர்ந்த அழகேசன் என்பவர் ரத்தினசாமிக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட சொன்னதாகவும் அதன் பெயரிலேயே தான் லஞ்சம் கேட்டதாகவும் கூறினார். இதற்கு இடைத்தரகராக முத்துக்குமார் செயல்பட்டதாகவும் ராம்ஜி கூறினார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

மேலும் அந்தியூர் ஏ.எஸ்.எம். நகரில் உள்ள துணை தாசில்தார் அழகேசன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். விடிய, விடிய நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். கைதான துணை தாசில்தார் அழகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராம்ஜி ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோபி ஆர்.டி.ஓ. பழனி தேவி பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி துணை தாசில்தார் அழகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராம்ஜி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself