கோபிச்செட்டிப்பாளையத்தில் டாக்டர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை

கோபிச்செட்டிப்பாளையத்தில் டாக்டர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் தீபாவளிக்கு மகள் வீட்டிற்கு சென்ற டாக்டர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை.

கோபிசெட்டிபாளையம் பாலிக்காடு செங்கோட்டையன் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் டாக்டர். ரவிந்திரன் (73). இவர் தனது மனைவி மற்றும் தாயார் ஆகியோருடன் கோவை ஒண்டிப்புதூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு தீபாவளி பண்டிகை கொண்டாட கடந்த 3-ம் தேதி கோவைக்கு சென்றார். பின்னர் மீண்டும் நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

இதையடுத்து அவர் வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றார். ஆனால் உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் பின்பக்கம் சமையல் அறை கதவை திறக்க சென்றார். அப்போது அந்த கதவின் பூட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் மாடியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் ஆரம், 3 பவுன் நெக்லஸ், 5 பவுன் தங்க கொடி, 6 பவுன் வளையல்கள் என மொத்தம் 18 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கோபிச்செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!