ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு சாப்பிடும் 86,313 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை
குமலன்குட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகளை அமைச்சர் முத்துசாமி வழங்கிய போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் உள்பட பலர் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் 86,313 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு குமலன்குட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் (2 ஜோடி) வழங்கும் நிகழ்ச்சி இன்று (29ம் தேதி) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணைச் சீருடைகளை வழங்கினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் 2ம் வகுப்பு முதல் 8ம் ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில், 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 43,231 மாணவர்களும், 43,082 மாணவியர்களும் என மொத்தம் 86,313 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பீடு ரூ.5.91 கோடி ஆகும்.
அதன்படி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு முதல் 8ம் ஆம் வகுப்பு வரை பயிலும் 142 மாணவர்கள் மற்றும் 118 மாணவியர்கள் என மொத்தம் 260 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் வங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து இடங்களிலும், தரமான சீருடைகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன் படி, சீருடைகள் தரமானதாக தயாரிக்கப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள். அப்பணிகளையும் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், வருகின்ற ஆகஸ்ட் 2ம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியானது, பொதுமக்களுக்கு பயனடையதாகவும், அவர்களிடம் பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையிலும் அமையவுள்ளது.
குறிப்பாக விளையாட்டு துறைச் சார்ந்து, பல்வேறு திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெல்ராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu