டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு (பைல் படம்).
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், குரூப்-1ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2024 தேதியின்படி பொதுப் பிரிவினருக்கு (OC) 34 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 39 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். இதற்கான தேர்வு வருகிற ஜூலை 13ம் தேதின்று நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், தினசரி தேர்வுகள், வாரம் இருமுறை தேர்வுகள், மாதிரி தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இப்பயிற்சி வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம், பயிற்சி கால அட்டவணை, மென்பாடக்குறிப்புகள் எடுத்துக் கொள்ள இணையதளத்துடன் கூடிய வைபை இணைக்கப்பட்ட கணிணி ஆகிய வசதிகளுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-4, டிஎன்யுஎஸ்ஆர்பி, டிஆர்பி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://me-qr.com/rxKmeKR4 என்ற லிங்க்கை கிளிக் செய்து தங்களது விவரங்களை பூர்த்தி செய்து தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு (ஐடிஐ அருகில், சென்னிமலை வழி) நேரில் வருகை தருமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஆண்,பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu