நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ கடிதம்

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ கடிதம்
X

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம்.

நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்க பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி ஆகியோர் இணைந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருக்கு நேற்று (30ம் தேதி) கடிதம் அனுப்பினர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி நகராட்சிக்கு பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், நல்லூர் ஆகிய ஊராட்சிப் பகுதிகளையும், சத்தியமங்கலம் நகராட்சிக்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொமரபாளையம் ஊராட்சியையும் சேர்க்க திட்டம் வகுக்கப்பட்டதாக முன் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அறிய வருகிறது.

ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் பின்தங்கிய ஏழை எளிய பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஊராட்சி பகுதிகளை நகராட்சிக்கு சேர்த்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் சொத்து வரி குடிநீர் வரி, வீடு கட்டுமான வரைபட அனுமதி வரி போன்ற வரிகளாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இப்பகுதி வசிக்கும் மக்கள் வான் மழை பெய்தால் மட்டும் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் தொழிற்சாலைகள் எதும் இல்லை. எனவே மேற்கண்ட ஊராட்சிகளை நகராட்சி எல்லைக்குள் சேர்க்காமலும், ஏற்கனவே செயல்பட்ட ஊராட்சிகளை தன்னிச்சையாக செயல்படவும் ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!