கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு முதல் சுற்று தண்ணீர் திறப்பு நிறுத்தம்

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு முதல் சுற்று தண்ணீர் திறப்பு நிறுத்தம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட முதல் சுற்று தண்ணீர் இன்று காலை நிறுத்தப்பட்டது.

பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட முதல் சுற்று தண்ணீர் இன்று காலை நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ் பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் உத்தரவின்படி நீர்வளத்துறை தண்ணீர் திறக்க கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அரசாணை வெளியிட்டது.

அதன்படி, கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை 5 சுற்றுகளாக 67 நாட்களுக்கு 11.5 டிஎம்சிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் எனவும், இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை, எள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, கடந்த 7ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து முதல் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே திங்கட்கிழமை (இன்று) பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட முதல் சுற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. இரண்டாம் சுற்று தண்ணீர் நீர்வளத்துறை வெளியிட்ட கால அட்டவணை குறித்த அறிவிப்பின் படி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (ஜன.22) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 79.80 அடி ,

நீர் இருப்பு - 15.58 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 644 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 800 கன அடி ,

பாசனத்திற்காக அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!