வடகிழக்கு பருவமழை: ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி
அத்தாணி பவானி ஆற்றில் தீயணைப்புத் துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில், வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில், ஈரோடு, நம்பியூர், பவானி, பெருந்துறை, அந்தியூர், ஆசனூர், கொடுமுடி, சென்னிமலை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய 11 தீயணைப்பு நிலையங்களில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி இன்று (3ம் தேதி) நடைபெற்றது.
அதன்படி, ஈரோடு காவேரிக்கரை கருங்கல்பாளையம், நம்பியூர் எலத்தூர் எல்பி.பி வாய்க்கால், பவானி காடையாம்பட்டி ஏரி, பெருந்துறை வாய்க்கால் மேடு எல்.பி.பி. வாய்க்கால், அத்தாணி பவானி ஆறு, ஆசனூர் ஓங்கல்வாடி குளம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் படித்துரை, சென்னிமலை இரட்டாபாளையம் எல்.பி.பி. வாய்க்கால், மொடக்குறிச்சி மண்ணாதம்பாளையம் காவிரி ஆறு, சத்தியமங்கலம் செண்பகபுதூர் வாய்க்கால், கோபிசெட்டிபாளையம் மூலவாய்க்கால் சத்தி ரோடு கோபி ஆகிய இடங்களில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இதில், வடகிழக்கு பருவமழை காலங்களில் எதிர்நோக்கும் மழைக்கால பேரிடர்களை கையாளும் விதம், தற்காலிக மிதவை உருவாக்கி மழை வெள்ளத்தில் மிதக்கும் விதம் கட்டட இடிபாடுகளில் உயிரினங்களை மீட்கும் உபகரணங்கள், தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்படும் ஊர்திகள் மற்றும் அவசர கால ஊர்தி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை மற்றும் சத்தியமங்கலம் செண்பகபுதூர் வாய்க்கால் ஆகிய இடங்களில் சுழல் ரம்பம், ஸ்கூபா நீச்சல் உடை, உடைக்கும் ரம்பம், மூச்சு கருவி, அதிக அழுத்தம் கொண்ட காற்று பைகள், உயிர்காக்கும் மிதவை, உயிர் காக்கும் மிதவை ஜாக்கெட், படகு மற்றும் விரிக்க வைக்கும் கருவி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் காட்சிபடுத்தப்பட்டு அதன் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள், தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu