ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடை பெற உள்ளது. இதையடுத்து இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, தமாகா, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் உள்பட மொத்தம் 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் (28ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. ஒவ்வொரு வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது 3 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிவானந்தம், ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகரைச் சேர்ந்த சுமதி ஆகிய 2 பேர் தாங்கள் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து, தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பாளர்கள், தங்களது மனுக்களை இன்று மாலை 3 மணிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதன் பின், இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களின் சின்னங்களுடன் இன்று மாலை மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu