ஈரோடு மாவட்டத்தில் விளைவித்த இடத்திலேயே விற்பனை: விவசாயிகளுக்கு அழைப்பு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த இடத்திலேயே விளைபொருள்களை விற்பனை செய்ய உதவும் வகையில் ‘இ-நாம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் விளைபொருள்களை விற்பனை செய்து பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைத்திடவும், தங்களது வருவாயினை உயர்த்திடும் வகையிலும் தேசிய மின்னணு வேளாண் சந்தைத்திட்டம் (e-NAM-electronic National Agriculture Market) 2016-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டமானது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஏதாவது ஒரு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலிருந்து பிற மாவட்ட மற்றும் பிற மாநில வணிகர்களுக்கு மின்னணு முறையில் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விளைபொருட்களின் அளவு மற்றும் தரம் நிர்ணயம் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதோடு வணிகர்களுக்கும் ஒரே தளத்தில் தேவையான விளைபொருட்கள் சரியான தரத்தில் கிடைக்க ஏதுவான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நேரடியாக வணிகர்களே மின்னணு ஏலத்தில் கலந்து கொள்வதால் போட்டியின் மூலம் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கான தொகை 48 மணி நேரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு கால விரையம் தவிர்க்கப்படுகிறது.
விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி நேரடியாக வணிகர்களுக்கே விற்பனை செய்வதை உறுதி செய்திடவும் தேசிய மின்னணு வேளாண் சந்தைத் திட்டத்தில் (e-NAM) பண்ணை வழி வர்த்தகமுறை (Farm gate trading) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் விவசாய விளைநிலங்களுக்கே சென்று விளைபொருட்களின் அளவு, தரம் மற்றும் இதர காரணிகளை ஆய்வு செய்து அதன் விவரங்களை புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்வதன் மூலம் வணிகர்கள் அவர்களின் இருப்பிடத்திலிருந்தே விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவுகள் தவிர்க்கப்படுகிறது.
எனவே, ஈரோடு மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தங்களது விளைபொருட்களை இ-நாம்செயலி அல்லது பண்ணை வழி வர்த்தகம் (Farm gate trading) மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu