Farmers Grievance Day ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
Farmers Grievance Day
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர், கூட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் தெரிவித்ததாவது, கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் முதிர்ச்சியடைந்து முழுவீச்சில் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நெல் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படும். தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டு தற்போது நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம். மேலும் விவசாயிகளுக்கு தேவையான பூச்சிமருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவுசங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
முன்னதாக, பட்டு வளர்ச்சித்துறை, உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்ட கருத்துக்காட்சி அரங்கினை பார்வையிட்டார். தொடர்ந்து, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், தமிழ்நாடு நீர்பாசன நவீன மையமாக்கல் திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாடகை இயந்திர மையத்திற்கு இயந்திரங்கள் வணிக மேம்பாட்டு நிதியாக ரூ.27.16 லட்சத்துக்கான காசோலையினை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்களிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) விஸ்வநாதன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன், செயலாளர்/துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக் குழு) சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், ஈரோடு, செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை, ஈரோடு மற்றும் பவானிசாகர் அணை கோட்டம், வருவாய்த் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu