கீழ்பவானியில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

கீழ்பவானியில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் இயங்கி வரும் மாவட்ட கருவூல கட்டிடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி, ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி, ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்பவானி பாசனத்துக்கு பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் 2ம் போக புன்செய் பாசனத்துக்கு உள்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு நஞ்சை பாசனத்துக்கு மொத்தம் 67 நாட்களுக்கு ஐந்து நனைப்புகளுக்கு 11.500 டிஎம்சி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணையை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு வெளியிட்டிருந்தது.


அதன்படி, ஜனவரி 7ம் தேதியிலிருந்து மே 1ம் தேதி வரையிலும் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதுவரையிலும் நான்கு நனைப்புகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டு இருந்த நிலையில் ஐந்தாம் நனைப்புக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் இயங்கி வரும் மாவட்ட கருவூல கட்டிடத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்.

விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகள் ஆவேசமாக கூறுகையில், மொத்தம் ஆறு நனைப்புகளாக தண்ணீர் திறப்பதாக முதலில் கூறியிருந்தீர்கள். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அதை 5 நனைப்புகளாக குறைத்து விட்டீர்கள். இதுவரை நான்கு நனைப்புகளுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது நனைப்புக்கு தண்ணீர் திறக்காததால் எள், நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம் போன்ற பயிர்கள் நீரின்றி கருகுகின்றன.

இந்தப் பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். எனவே ஐந்தாம் நனைப்புக்கான தண்ணீரை உடனடியாக அணையில் இருந்து திறந்து விட வேண்டும். அதுவரையிலும் நாங்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருப்போம் என்று கூறினர்.

விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் உதயகுமார் ஆகியோர் கூறுகையில், நாளை செவ்வாய்க்கிழமை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அணை செயற்பொறியாளர் மற்றும் ஈரோடு கோட்ட செயற்பொறியாளர் முன்னிலையில் விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் நடத்தி தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

தண்ணீர் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க போவதாக கூறிய விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா