ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்: ஜெயக்குமார்
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து மரப்பாலம் அருகே உள்ள சம்பந்தம் வீதியில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து மரப்பாலம் அருகே உள்ள சம்பந்தம் வீதியில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், விடியா அரசு ஜனநாயகத்தை தோற்கடித்து புதைத்து பணநாயகத்தை கொள்ளையடித்து வருகிறது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு வழங்கப்படுகிறது. குறுக்கு வழிகளில் தேர்தலை எதிர்நோக்கி வருகிறார்கள். பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரத்தை திமுக அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார்.
இதை எப்படி நம்புவது. செங்கல் நாயகன் ஆட்சிக்கு வந்ததும் நீட்டுக்கு விலக்களிப்பதாக கூறினார். ஆனால் இப்போது வரை ஒன்றும் செய்யவில்லை. கல்வி பாடத்திட்டத்தை பொதுப்பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு திமுக அரசு மாற்ற வேண்டியது தானே. ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்கள் கொள்கை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பார்த்த பெண்மணி ஒருவர் திமுகவினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இறைக்கிறார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்கிறார். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுகவினர் சர்வ அதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இறைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். பணம் பரிசுப் பொருட்கள் விநியோகப்பதை தடை செய்ய வேண்டும். திமுகவினர் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அவர்கள் எத்தனை முறை டெல்லி சென்றார்கள். எத்தனை பேரை சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள். நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி தான் நிற்கிறோம் பணத்தை நம்பி நிற்கவில்லை. மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்ற வில்லை.
கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுப்பதற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இரவு 11 மணிக்கு வந்து என்னை கைது செய்தனர். உடைமாற்றி வருகிறேன் என்று சொன்னால் கூட கேட்காமல் என்னை கைது செய்தனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள். அதிமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன், இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu