மகன் விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றுவேன்; ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர்கள்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் வார்டு எண் 16, 17 மற்றும் 23 ஆகிய பகுதிகளில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமையில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று இரவு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி வேனில் வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டனர்.
அப்போது வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது,: மறைந்த எனது மகன். திருமகன் ஈவெரா இத்தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து ஒரு பட்டியல் தயாரித்து வைத்துள்ளார். அவர் விட்டுச் சென்ற பணிகளை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன். குறிப்பாக கிழக்குத் தொகுதியில் குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் வேண்டுகோளின்படி பணிகள் நிறைவேற்றப்படும். குடிநீர் விநியோக பிரச்னையில் தற்போது நிலவி வரும் குளறுபடிகள் கடந்த ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் உருவானவையாகும்.
அமைச்சர் முத்துசாமியின் முன்னெடுப்பில் அவை படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. கிழக்குத் தொகுதியில், மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அமைச்சரின் நடவடிக்கையால் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நகரில் போக்குவரத்து பிரச்சனைகள் பெருமளவில் தீர்க்கப்படும். இதேபோல ஜவுளி வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் கடந்த ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களை தீர்க்க அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். நகரில் உள்ள ஜவுளி மற்றும் இதர வியாபாரிகளின் நலன் காக்க அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார். இதில், திமுக , காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திரளானோர் பங்கேற்று கொட்டும் மழையிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu