பஸ்களில் முககவசம் அணியாமல் அலட்சியமாக பயணிக்கும் பயணிகள்

பஸ்களில் முககவசம் அணியாமல் அலட்சியமாக பயணிக்கும் பயணிகள்
X

ஈரோடு பேருந்து நிலையத்தில் சோதனை பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள். 

ஈரோட்டில் தொற்று குறைந்து வரும் நிலையில் வெளியூரிலிருந்து வரும் பஸ்களில் முககவசம் அணியாமல் பயணிக்கும் பயணிகள்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்தபோது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கடந்த 9ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை மாவட்டத்தில் புதிய நேர கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதைப்போல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொற்று பாதிப்பு வரக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

வெளிமாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தினசரி கொரோனா பரிசோதனை மீண்டும் அதிகரித்து தினமும் 10 ஆயிரம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வந்தது. இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 146 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 594 ஆக உயர்ந்தது. இதுவரை 646 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 1557 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வெளியூர்களில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பஸ்களில் வரும் பெரும்பாலான பயணிகள் முககவசம் அணிவது இல்லை. ஒரு சிலர் மட்டும் முக கவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை முறையாக அணியாமல் கழுத்திற்கு கீழ் அணிந்து வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சேலம், கோயம்புத்தூரில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ்களில் பயணிகள் முககவசம் முறையாக அணிவதில்லை.

ஈரோடு பஸ் நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என்ற காரணத்தால் மட்டும் ஒரு சிலர் முககவசம் அணிவது போல் பாசாங்கு செய்கின்றனர். ஈரோட்டை கடந்தவுடன் முககவசத்தை எடுத்து விடுகின்றனர். இதை சில பஸ் டிரைவரும், கண்டக்டரும் கண்டுகொள்வதில்லை. கொரோனாவை வெல்லும் முக்கிய ஆயுதமாக முககவசம் இருந்து வருகிறது. பொதுமக்கள் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா