கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் வழங்கல்

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் வழங்கல்
X

சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொரோனாவால் பெற்றோரை இழந்த 14 குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வீதம் ரூ 42 லட்சம் மதிப்பிலான கசோசலைகளை வழங்கினார். மேலும் மின்சாரம் மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்த 7 குடும்பத்தினருக்கு ரூ 15 லட்சம் மதிப்பிலான உதவித் தொகை வழங்கினார். 25 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் 25 சலவை பெட்டிகள்,16 பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்டங்கள் என 71 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்து 19 ஆயிரத்து 450 மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கி வருகிறார். நமது மாவட்டத்தை பொறுத்தவரை 6 லட்சத்து 34 ஆயிரத்து 992 பேர் காப்பீட்டு உதவிகள் பெற்றுள்ளார். இதில் 16,634 பேர் நேரடியாக பயனடைந்துள்ளனர். 36 கோடியே 60 லட்சத்து 12 ஆயிரத்து 794 ரூபாய்க்கு காப்பீட்டுக்கு செலவழிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் விரைவில் 3 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சோலாரில் 25 ஏக்கரில் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் அமைக்கப்படும். அதற்கு ஒன்றரை வருடம் ஆகலாம். அதற்கு முன் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் ஒன்றரை மாதத்தில் முடிவடையும்.

கரூர் மார்க்கமாக வரும் பஸ்கள் இங்கு நிறுத்தப்படும். அதைப்போல் கனிராவுத்தர் குளம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு சத்தியமங்கலம் கோபி பஸ்கள் வந்து நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அரச்சலூரில் 4 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு இந்த பகுதியில் பஸ் நிலையங்கள் வந்தால் மாநகர் பகுதிக்குள் பஸ் போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதேபோல் சிஎன்சி கல்லூரியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ரூ.35 கோடி மதிப்பில் விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கப்படும். மேலும் பிரம்மாண்ட நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோட்டில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை 42 ஆயிரம் மனுக்கள் வரப்பட்டு உள்ளன. இதில் 90 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 85 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருக்கும் ஒன்றியத்திலேயே இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 550 படுக்கைகள் இருந்தன.தற்போது 1200 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைப்போல் பெருந்துறை மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு 100 என்ற நிலையில் இருந்ததை உயர்த்தி 250 மாணவர்கள் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது. இதேபோல் பிஜி கோர்ஸ் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் ஊக்கமளித்து வருகிறார். நமது மாவட்டத்தில் கொரோனாவால் 338 குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து உள்ளனர். அவர்களுக்கு படிப்படியாக அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கணேசமூர்த்தி எம்.பி, திருமகன் ஈவெரா காங்.எம்.எல்.ஏ, .டிஆர்ஓ முருகேசன், ஆர்டிஓ பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!