ஈரோடு கலெக்டர் அலுவத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
X

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள். 

கரடு முரடான வீட்டு மனைகளை அளவீடு செய்து சமன் செய்யக் கோரி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் முற்றுகை.

ஈரோடு மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்தோடு அடுத்த நல்லகவுண்டம்பாளையம் என்ற இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டு தலா 600 சதுர அடி வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மனை வழங்கப்பட்ட இடம் கரடு, முரடாக, பாறைகளாக இருந்ததுள்ளது. எனவே இந்த இடத்தை அளவீடு செய்து சமன் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் பல மாதங்களாகியும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் 100 க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய மாற்று திறனாளிகள், ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதெல்லாம் எங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதிகாரிகள் இரண்டு மாதங்களில் இடம் அளவீடு செய்யப்பட்டு சமன் செய்து தரப்படும் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் சொன்னதுபோல் செய்யவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடமாக இந்த விஷயத்துக்காக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று நாங்கள் 150- க்கும் மேற்பட்டவர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் இங்கேயே காத்திருப்போம். இதேபோன்று ஈரோட்டில் நரம்பியல் மருத்துவர்கள் இல்லாததால் எங்களுக்கு சான்றிதழ் வாங்குவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே ஈரோட்டில் நரம்பியல் மருத்துவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு